Wednesday, June 11, 2008

^^^^^^^^ அப்பாசாமி ^^^^^^^

உன்
செயலிலும்,
கனவிலும் ,
உழைப்பிலும்,
கண்ணிலும்,
இப்படியாய் தான் உணர்த்துவாய்.
பாசத்தை பகிரங்கபடுத்த
தெரியாதுனக்கு.

அறியா வயதில்,
தெரியாமல் வெந்நீர் தெறித்திட்டதால்,
துளிநேரம் நினைவிழந்தபோது...
தேகம் நடுங்க,
நான் 'அப்பா' சாமி...
நான் 'அப்பா' வந்திருக்கேன் சாமி...
என்றெல்லவா கதறியழுது சாமியாக்கினாய்.

பண்டிகை நாட்களும்,
மதிப்பெண் சான்றிதழ் தரும் நாட்களும்,
நீ கவலையை மறக்கும் நாட்கள்.
அன்றையை,
உன் புன்சிரிப்புக்காக
தினமும் தேர்வெழுத தயாராயிருந்தேன்...

சர்க்கரை சாப்பிட
விரும்புவது அனைவரின் இயல்பு.
ஆனால்
சர்க்கரை உன்னை சாப்பிட
விரும்பியதின் விநோதம் புரியவில்லை.

எந்தவொரு
மரண நிகழ்வுகளிலும், ஈம சடங்குகளிலும்
நான் இல்லாமல் பார்த்துகொன்டாய்.
உன் மரணம் உட்பட.

"நான் இருக்கிறேன்"
என்றுன்னைபோல் தன்னம்பிக்கை சொல்ல,
இனி இங்கில்லை எவரும்.

அதெப்படி?
என் கைபிடித்து
வழிக்காட்டிய உன் கைகளுக்கு,
உன் நடைதளரும் வேலையில்,
நான் தோள்கொடுக்க வேன்டாமா?
என்ன அவசரம் உனக்கு?
என்னை விடவா,
அந்த ஆண்டவன் உன்மேல்
அன்பு வைத்தான்...?

நிகழ்வது சாத்தியமில்லை என்றாலும்,
நிசப்தமாய் கேட்கிறேன்...

என் "அப்பாசாமியே"
நாளையவது வந்துவிடு.
நிறைய பேச வேன்டும்.


6 வருடங்களாய் பேச காத்திருக்கும்,.,,
- சீனிவாசன் ஆளவந்தார்.

^^^^^^^^ அப்பா துணை ^^^^^^^^

என் இனிய அப்பாவுக்கு..

நலமா?...

சூரியனில் மழை போல் - உன் அன்பு,
இதய தேசத்தில்
இறுகி கிடக்கிறது.

சிக்கனம் - உனக்கு
நாங்கள் வைத்த பெயர்.
இருந்தும்,
என்றும் வைத்ததில்லை குறை.

எஙகளை
பேணி வளர்ப்பதில்
நீ தீவிரமாய் இருக்க,
உன்னை
பிணி வளர்த்தது
தெரியவில்லை.

இப்படி உடுத்திகொள்-
என்ற காலத்திலும்,
அழகாய் சொன்னாய்...
தான் முழுமையான தந்தையாய்
எதுவும் செய்யவில்லை என்று.

தகப்பனாய் தன்னையே தந்தாய்,
பாசப்போட்டியில்
நீயே முதலிடம் - ஆனால்
வேண்டுமென்றே பெறுவாய் இரன்டாவதிடம்.

எங்களின் சந்தோஷம்,
உனது சுமை.
உனது சந்தோஷமும்
அதுவே...!!

வாழ்த்தி விடை கொடுத்தாய்.
எட்டு நாட்கள். - ஒரு நேர்முக தேர்வு.
திரும்பினால் ,...

எப்படி முடிந்தது உன்னால்???
என்னை விட்டு ஏன் செத்து போனாய்..??
உன்னை எஙகள் குழந்தையாய் பார்க்கும் காலத்தில்.

நிச்சயமாய் தெரியும்,
உன் விருப்பமில்லாமல் தான்
நீ அழைக்கபட்டிருக்கிறாய்...!!!

இதோ,
எங்களது
சுமையும், சந்தோஷமும்
உன் கனவு ஒன்றே...!!!

இறைவா...
உனனை புரிந்துகொள்ள ஞானமில்லை,.
இதுதான் உன் நியதி என்றால் -
தயவு செய்து (மரியாதையாய்) உன் படைப்பை நிறுத்து.

உன் நிழலில்,
5 வருடங்களாய்....